450. தீவிரவாதம் கருக்கிய மலர்கள்
"அம்மா, எனக்கு தாகமா இருக்கு, கொஞ்சம் தண்ணி தாயேன்" என்றும், "அம்மா, ஏன் எனக்கு சாப்பிட ஒண்ணுமே தர மாட்டேன்கிற, பசிக்குது" என்றும், "அம்மா, என்னை அப்பாகிட்ட கூட்டிட்டுப் போயேன்" என்றும் நெருப்பில் இட்ட புழுவாக, யாஷ் என்கிற அந்த 9 வயது பாலகனின் வேதனை அலறல்,பார்ப்பவரின் நெஞ்சை உருக்குவதாக உள்ளது :( தனது கணவனை சமீபத்திய அகமதாபாத் குண்டு வெடிப்பில் பறி கொடுத்த (கீதா என்கிற) அந்தத் தாய், தன் மகனின் நிலையைக் கண்டு வெடித்து அழுவதைப் பார்க்கையில், 'கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா' என்ற ஆதார சந்தேகம் வருகிறது :(
மேற்கூறிய காட்சி, அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் தீக்காய சிகிச்சைப் பிரிவில்! அதே மருத்துவமனை வாசலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பின் காரணமாக 50% தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் யாஷுக்கு, டாக்டரின் அனுமதியின்றி ஒரு சொட்டுத் தண்ணீரோ, உணவோ தர இயலாத நிலையில் கீதா பரிதவிப்பது காணச் சகிக்காததாக இருக்கிறது. டிரிப் வழியாக குளுகோஸுடன் பல மருந்துகள் யாஷுக்கு ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. யாஷின் அண்ணன் ரோஹன், அதே மருத்துவமனையில் 80% தீப்புண்களுடன் இன்னும் மோசமான நிலையில் இருக்கிறான்.
தீவிரவாதத் தாக்குதலின் கட்டுப்பாடற்ற, சிறிதளவும் மனிதநேயமற்ற குரூரத்தை, இந்த இரு குழந்தைகளின் அவல நிலையே காண்பவர், தெளிவாக உணர முடியும். அதே சிகிச்சைப் பிரிவில், உடல் முழுதும் வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டு வலியில் துடித்துக் கொண்டிருக்கும் சுனில் என்பவர், மிக்க மன உறுதியோடு, "என் வலியுடன் என்னால் போராட முடியும். ஆனால், எந்தத் தவறும் செய்யாத இக்குழந்தைகள் வேதனையில் துடிப்பதையும் அலறுவதையும் பார்க்கையில் என் இதயம் வெடித்து விடுவது போல இருக்கிறது!" என்று கூறுகிறார். மொத்த மருத்துவமனையும் அக்குழந்தைகளுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறது.
அந்த சிவில் மருத்துவமனையின் வாசலில் அவரது இரு மகன்களுக்கு, தந்தையான வியாஸ் (அவர்களுக்காக வாங்கிய புது) சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தபோது தான், குண்டு வெடிப்பில் சிக்கி காயமடைந்தவர்களுடன் முதல் ஆம்புலன்ஸ் வண்டிகள் வரத் தொடங்கியிருந்தன. எமன் காத்துக் கொண்டிருந்தது தெரியாமல் அவர்களின் சைக்கிள் நேராக குண்டு வைக்கப்பட்டிருந்த காரை நோக்கி பயணித்தபோது, குண்டு வெடித்து, வியாஸ் சிதறடிக்கப்பட்டார். மற்றும் 11 பேர் (இதில் ஒரு டாக்டர் தம்பதியும் அடக்கம்!) பலியாயினர் :(
அடிபட்டவருக்கு உதவி செய்ய ஓடோ டி வந்த 20 வயது பவேஷ், மருத்துவமனை குண்டு வெடிப்பில் படு காயமடைந்து, அதே மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கிறார். குண்டு வெடிப்பில் அடிபட்ட பல நபர்களை மருத்துவமனைக்கு கூட்டி வந்த வினோத் என்கிற ஆட்டோ ஓட்டுனர் மருத்துவமனை குண்டு வெடிப்பில் சிக்கி, இரு கால்களும் செயலிழந்த நிலையில் பரிதாபமாக காட்சியளிக்கிறார் ! அந்த வேதனையிலும், "இனி கஷ்டத்தில் இருக்கும் யாருக்கும் என்னால் உதவ முடியாதே" என்று அரற்றுகிறார் :( What a senseless and mindless act of violence unleashed by these terrorists!
அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புகளில் சிக்கியவர்கள் அங்கிருக்கும் 2 முக்கிய அரசு மருத்துவமனைகளுக்குத் தான் எடுத்து வரப்படுவார்கள் என்று சரியாக கணித்து, இந்த 2 மருத்துவமனைகளில் சரியான நேரத்தில் குண்டு வெடிக்குமாறு தீவிரவாதிகள் திட்டமிட்டுச் செய்துள்ளனர்.
ஈவு இரக்கமில்லாமல் அப்பாவிகளை வேட்டையாடும் இந்த தீவிரவாத அரக்கர்களை என்ன செய்தால் தகும் ?
எ.அ.பாலா
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா